Pages

Powered By Blogger

Wednesday, October 1, 2014

சட்டமும் சமுதாயமும்

நியாயமான தீர்ப்புதானே, இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம், அழுகை?' என்று என்னிடம் நண்பர் கேட்டார்.

"உங்க வீட்ல யாரும் ஜெயிலுக்குப் போனதில்லை போலும்" என்றேன். அவர் கோபித்துக்கொண்டு நடையைக் கட்டினார்.

அவரது அறியாமையைக் கண்டு வியப்பதைத் தவிர ஏதும் செய்ய இயலவில்லை. அவர் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டவர். அவரிடம் விளக்குவதிலும் அர்த்தமில்லை.

ஒரு தீர்ப்புக்குப் பிறகு ஏற்படும் அழுகை, புலம்பல், ஆர்ப்பாட்டம் ஆகியவை நியாயத்துக்கும் நீதிக்கும் எதிர்வினை அல்ல.

ஒரு குடும்பத்தில் ஒருவர் சிறை செல்லும்போது அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அழுகிறார்கள். மிகப்பெரும் துக்கம் கவிகிறது.

குடும்ப அங்கத்தினர் சிலர் நீதிமன்றத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, மற்றவர்கள் சிறை வாசலில் கிடக்கிறார்கள். சிலர் வீட்டுக்கு வந்த பின்னும் துயரம் தாங்காமல் வாடுகிறார்கள்.

சிறை சென்ற நபர் அடிதடியில் ஈடுபட்டிருக்கலாம். கொலை, திருட்டாக இருக்கலாம். எத்தகையக் குற்றமாக இருந்தாலும், அந்தக் குடும்பம் அந்த நபருக்காக கண்ணீர் சிந்தவும், தண்டனையிலிருந்து அவரை மீட்கவுமே முயலும். நீதிமன்றம் தண்டித்ததற்காக குடும்பமும் அவரை தண்டிப்பதில்லை.

இதேதான் ஒரு கட்சித் தலைவி அல்லது தலைவர் ஒரு குற்றத்துக்காக தண்டனை பெற்றுச் சிறை செல்லும்போதும் ஏற்படுகிறது. தனிநபருக்கு ஒரு குடும்ப அளவில் என்றால் ஒரு தலைவிக்கு மாநில அளவில் நடக்கிறது.

சட்டத்தின் முன் எல்லாரும் சமமாக இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைவரும் சமம் அல்லர். சமூகம் ஒவ்வொருவருக்கும் ஒரு மதிப்பீட்டைத் தருகிறது. அதில் தலைமைக்கு முதல் இடம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும் மற்ற இருவரும் மட்டும் தண்டிக்கப்பட்டு, ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருந்தால், சசிகலாவுக்காக தமிழ்நாடு கண்ணீர் வடித்திருக்காது. நிச்சயமாக எந்தக் கலவரமும் நடந்திருக்காது.

ஆனால், இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா மீதானது என்பதால்தான் தமிழ்நாட்டில் இத்தகைய எதிர்வினைகள்! ஏனென்றால், அவரை நேசிக்கவும், அவருக்கு துன்பம் நேர்ந்தால் அழவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

இது காலங்காலமாக இருந்துவரும் மனநிலை. போர்க்களத்தில் மன்னர் சிறைப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் அரண்மனையில் பல பேர் தற்கொலை செய்துகொள்வார்கள்.

அவர்களால் அந்த சோகத்தை - வெற்றிடத்தை - ஏற்றுக்கொள்ள இயலாது. தற்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் இதே உளவியல்தான்.

எல்லாமும் எல்லாருக்கும் தெரியும். தலைவர்களின் குறை, நிறைகளோடுதான் மக்கள் ஏற்கிறார்கள். தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறார்கள். சமூகம் ஒருபோதும் அப்பாவித்தனமாக வாக்குகளை அளிப்பதேயில்லை.

ஒரு தலைவன் என்பவன் சமூகத்தின் உருவாக்கம். ஒரு சமூகம் எந்தெந்தக் குறைகளை பெரிதாகக் கருதவில்லையோ அந்தக் குறைகளை அந்த சமூகம் அதன் தலைவனிடமும் காணாது; பெரிதுபடுத்தாது.

இதே உளவியலைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கிலும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

இந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு அவருடைய தொண்டர்கள் அழுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதும் உண்ணாநிலை காண்பதும், சிறைசென்ற ஒருவரது குடும்ப அங்கத்தினரின் மனநிலைக்கு ஒப்பானது.

நாளை 2ஜி வழக்கில் ஆ. ராசா, கனிமொழி சிறை சென்றால் இதே சமூக வெளிப்பாடு தமிழ் மக்களிடம் ஏற்படாது. தொலைபேசி இணைப்புகளை முறை

கேடாக வீட்டுக்குள் வைத்திருந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கைது செய்யப்பட்டாலும் தமிழர்களுக்கு அது வெறும் செய்தி மட்டுமே.

ஆனால், கருணாநிதி கைது செய்யப்பட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் தற்போது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள எதிர்வினைகளுக்கு இணையான அழுகையும் ஆர்ப்பாட்டமும் உறுதியாக நிகழும்.

ஏனெனில், சட்டத்தின் முன்பாக ஜெயலலிதாவும் கருணாநிதியும், சாமானியனும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், சமூகத்தின் முன் அவர்கள் மதிப்பு வேறானவை.

சில நேரங்களில் சட்டம் தரும் சலுகையை சமுதாயம் கொடுப்பதில்லை. சில நேரங்களில், சமூகம் தரும் சலுகையைச் சட்டம் ஏற்பதில்லை.

By இரா. சோமசுந்தரம்
First Published : 02 October 2014 01:42 AM IST
தினமணியில்

No comments:

Post a Comment