Pages

Powered By Blogger

Monday, September 15, 2014

கடவுள் என்பது யார்?

கடவுள் யாரோ ஒருவராக இல்லை. ஏனென்றால் அவர் ஒரு நபர் அல்லர். கடவுள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு முழுமையான உயிர்த்தன்மை.(EXISTENCE). அந்தச் சொல், யாரையும் குறிப்பிடாது. கடவுள் என்பது 'எல்லாம்' (ALLNESS) என்று மட்டுமே கூறமுடியும். நான் கடவுள் --நீங்கள் கடவுள் -- ஏன் எல்லாருமே கடவுள்தான். சரியாகச் சொன்னால், இந்தக் கடவுள் என்ற வார்த்தையை உபயோகிப்பதே சரியில்லை. எங்கும் கடவுள்தன்மை (GODLINESS)தான் இருக்கிறது. கடவுள் என்ற எதுவும் தனியாக இல்லை. ஏன், கடவுளர்களே இல்லை. 'உண்மையை' சரியாகக் குறிப்பிட, ' கடவுள்தன்மை' என்ற வார்த்தைதான் சரியானது. 'கடவுள்' என்ற வார்த்தை இல்லை. நீங்கள் இந்த 'கடவுள்' என்ற வார்த்தையை உபயோகிக்கும்பொழுது, அதிலிருந்து பல விஷயங்கள் வெளியே வருகின்றன. முதலில் கடவுள் என்பது ஒரு தனி நபராகிறது. ஆனால் கடவுள் என்பது ஒரு தனி மனிதன் இல்லை. அது ஒரு சுட்டிக்காட்ட முடியாத உயிரியக்கம். நீங்கள் கடவுள் என்று குறிப்பிடும்பொழுது, அந்த வார்த்தை பெரும்பாலும் ஆணைக் குறிக்கிறது--ஆண் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. இது மிகவு‌ம் அருவருப்பானது. 'கடவுள்' என்பது 'அவனோ' அல்லது 'அவளோ' அல்லள். அப்படி ஆண் அல்லது பெண் பிரிவில் அதை அழைக்க விரும்பினால், அதைப் பெண் என்றே குறிப்பிடுங்கள்--ஏனென்றால், பெண்ணில், ஆணும் அடக்கம். ஆனால், ஆணில், பெண் அடக்கம் இல்லை. ஆகவே, பெண் என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். பெண் என்ற சொல், ஆண் என்ற சொல்லைவிட மிகப் பெரியது. பெண்ணின் மூலமாகவே, ஆண் பிறக்கிறான். ஆகவே, ஒரு பெண்ணால், ஆணைத் தன்னுள் அடக்கிக் கொள்ள முடியும். ஆனால், ஒரு பெண்ணை தன்னுள் வைத்துக் கொள்ள ஓர் ஆணால் முடியாது. இது இயற்கை நியதி. ஆணுக்குள் கர்ப்பப்பை என்று எதுவும் கிடையாது. ஆனால், இரண்டுமே சரியில்லை. கடவுள் ஆணும் அல்ல. பெண்ணும் அல்ல. அவர் ஒரு நபரே கிடையாது. அப்படியென்றால், கடவுள் என்பது என்ன? தயவுசெய்து 'கடவுள் என்பது யார்?' என்று கேட்காதீர்கள். 'கடவுள் என்பது என்ன?' என்று கேளுங்கள். கடவுள் என்பது வாழ்வு, கடவுள் என்பது அன்பு, கடவுள் என்பது ஒளி...அது ஒரு பேரியக்க பிரபஞ்ச அனுபவம். கடவுள் என்ற ஒரு பொருளை அல்லது நபரை, நீங்கள் ஒருபோதும் சந்திக்க முடியாது. நீங்கள் உங்களுடைய உள் உணர்வாக, கடவுள்தன்மையை அனுபவமாக அறிந்து கொள்ளலாம். ஏதோ ஒன்று உங்களின் உள்ளே மலர்கிறது.. ..அந்த மலரைக்கூட உங்களால் பார்க்க முடியாது. ஆனால், அதன் நறுமணத்தை நீங்கள் தீர்க்கமாக உணரலாம். ஆகவே, கடவுள் என்பது நறுமணம்தான். மலர் அல்ல. கடவுள் எங்கே இருக்கிறார், அவர் யார்? என்று என்னால் குறிப்பிட்டு சுட்டிக் காட்ட முடியாது. நான் அந்த நறுமணத்தை உணர்ந்த அனுபவத்தை வேண்டுமானால், என்னால் ஓரளவு வெளிப்படுத்த முடியும். இந்தப் பிரபஞ்ச உயிரியக்கம் அனைத்திலும், கடவுள்தன்மை இரண்டறக் கலந்திருக்கிறது. எல்லாமே தெய்வீகம்தான்--இந்த மலர்கள், பறவைகள், பாறைகள், ஆறுகள். ...நீங்கள் கடவுளுக்காக, எந்தக் கோயிலையும், எந்த சர்ச்சையும் ஏற்படுத்தத் தேவையில்லை. இது மிகவும் முட்டாள்தனம். ஏனென்றால், கடவுள் எங்கும், எதிலும் இருக்கிறார். ஆகவே, யாருக்காக நீங்கள் கோயில்களையும், சர்ச்சுகளையும், மசூதிகளையும், ஏற்படுத்துகிறார்கள்? நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்பினால், எங்கே வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம். நீங்கள் எங்கே குனிந்து வணங்கினாலும், அது கடவுளை நோக்கி, குனிந்து வணங்குவதாகிறது. ஏனென்றால், அங்கு அதைத்தவிர, வேறு எதுவும் இல்லை. ஓஷோ.

No comments:

Post a Comment